தமிழ்நாடு அரசு ,பள்ளிக்கல்வி பயணிக்க வேண்டிய பாதை....

 


தமிழ்நாடு அரசு ,பள்ளிக்கல்வி பயணிக்க வேண்டிய பாதை

ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அரசுப்பள்ளி மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு பதினைந்திற்கும் மேற்பட்ட வகையான நலத்திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருவது அறியத்தக்கதே. அவற்றுள் பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், கணித உபகரணப்பெட்டி, வண்ண எழுதுகோல்கள், உலக வரைபடப் புத்தகம் போன்றவை மிகவும் தரமானவையாக இருப்பது சிறப்பாகும். அதேவேளையில், தரமற்ற, எளிதில் கிழிந்து விடக்கூடிய, அளவு சரியில்லாத பருவ வாரியாக வழங்கப்படும் இலவச சீருடைகளுக்கு மாற்றாக நல்ல தரமான, எளிதில் கிழியாத, ஓரளவிற்கு பொருந்தக்கூடிய அளவிலான இரண்டு இணைச் சீருடைகள் முன்கூட்டியே வழங்குவதை உறுதிப்படுத்துதல் அவசியமாகும்.

ஆசிரியர், மாணவர் வருகைப் பதிவு  உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்ட அனைத்துப் பதிவுகளையும் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மைய செயலியிலும் வழக்கமாகப் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளிலும் கற்பித்தல் பணிக்கு இடையூறாகக் கட்டாயமாக மேற்கொள்ள அறிவுறுத்தும் போக்குகள் எளிமையாக்கப்பட வேண்டும். இணைய வழியிலான பதிவே  போதுமானது. நிரந்தரமானதும் கூட.

பள்ளி, வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கலைத்திருவிழா, சிறார் திரைப்படப் போட்டிகள், விநாடி வினா, வானவில் மன்றம் சார்ந்த பல்வேறு வகையான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உரிய சான்றிதழ், கேடயம் மற்றும் அயல்நாட்டுச் சுற்றுலா ஆகியவை அரசால் ஏற்பாடுகள் செய்யப்படுவது என்பது வரவேற்கத்தக்க நிகழ்வுகளாகும். இருப்பினும், இப்போட்டிகள் அனைத்திலும் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பது உண்மை. 

பல்வேறு பள்ளிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு ஆசிரியர்கள் வழியாக வழங்கப்படுவது மிகக் குறைவாகவே உள்ளது. சில போட்டிகளில் மாணவர்களின் பங்களிப்பு என்பதே இல்லை. நூற்றுக்கும் மேற்பட்ட நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகள் நிறைந்த ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டி நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள 10% பள்ளிகளே அங்குள்ள ஆசிரியர்கள் சிலரின் தன்னார்வ முயற்சியில் கலந்து கொள்ளும் சூழல் எதிர்வரும் காலங்களில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பது கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாகும். 

கல்வி உரிமைச்சட்டம் காரணமாக அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்க விரும்பாத தனியார் மெட்ரிக் பள்ளிகளை மோகிக்கும் 25% பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு ஆண்டுதோறும் அவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு ஏற்பதும் அதற்காக கோடிக்கணக்கான தொகையை வாரி வழங்குவதும் நல்ல செயலாகாது. ஏழை, எளிய, அடித்தட்டு மக்களின் வரிப்பணம் இதுபோன்ற காரணங்களுக்காக வீணாகச் செலவிடுவது ஏற்புடையதல்ல. ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் தனியார் பள்ளிகளுக்குக் கொட்டி அழிக்கப்படும் பொதுமக்கள் வரிப்பணத்தை அரசுப் பள்ளிகளின் அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் நியமனத்திற்கு பயன்தரத்தக்க வகையில் செலவிடுவதே சாலச்சிறந்தது. அரசுப் பள்ளிகளுக்கு எதிரான இந்த நடைமுறை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்ட மழலையர் வகுப்புகளால் மாணவர் சேர்க்கை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் அடையாளம் கண்டறியப்பட்ட உபரி இடைநிலை ஆசிரியர்கள் தற்காலிகமாக இவ்வகுப்புகளுக்குப் பணிநியமனம் செய்யப்பட்டனர். அதுபோல், அனைத்துக் குழந்தைகளுக்கும் பாடப்புத்தகங்கள், சீருடைகள், புத்தகப் பைகள், எழுதுபொருள்கள், காலணிகள் முதலானவை வழங்கப்பட்டன. 


இத்தகைய வகுப்புகள் மீண்டும் சமூக நலத்துறையின் கீழ் அங்கன்வாடிப் பணியாளர்களைக் கொண்டு அங்கன்வாடி மையங்களிலேயே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டதும் அதற்கு பல்வேறு தரப்பினரும் தெரிவித்த எதிர்ப்புகளால் மீண்டும் அரசுப் பள்ளிகளிலேயே இயங்கும் என்று அறிவித்ததும் ஒப்பந்த அடிப்படையில் உள்ளூர் படித்த, பட்டதாரி பெண்களைப் பகுதிநேர தன்னார்வ ஆசிரியராக நியமித்துள்ளதும் அனைவரும் அறிந்ததே. அஃது ஒரு வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக இருந்துவிடக் கூடாது. அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்ட மழலையர் வகுப்புகள் தொடர்ந்து செவ்வனே இயங்க தக்க தகுதி மிக்க ஆசிரியர்களையும் குழந்தைகளுக்குத் தேவையான கல்வி உபகரணங்களையும் தரமான சீருடைகள் உள்ளிட்ட பொருட்களையும் உரிய காலத்தில் வழங்குவது இன்றியமையாதது. 


மாண்டிசோரி உள்ளிட்ட கல்வி வல்லுநர்கள் பரிந்துரைத்த எளிய விளையாட்டு வழி கற்றலில் இனிமை அடிப்படையில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் உற்சாகத்துடன் இக்குழந்தைகள் கற்க தொடங்கப்பட்ட்டுள்ள அனைத்து மழலையர் வகுப்புகளுக்கும் திறன்மிகு தொலைக்காட்சி வழி காணொலிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுதல் இன்றியமையாதது. இது அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்பட வேண்டும்.


ஆசிரியர் பணிப்பதிவேடுகளில் எண்ணற்ற விடுபாடுகள் காணப்படுகின்றன. இதற்கு முழுமுதற் பொறுப்பு அவ்வக்காலங்களில் பணிபுரிந்த கல்வி அலுவலர்களின் மெத்தனம் மற்றும் அசட்டைப் போக்குகளே காரணங்களாகும். அதற்கு சம்மந்தப்பட்ட ஆசிரியர் பெருமக்களைப் பலிகடா ஆக்குவது தொழிலாளர் சட்டத்திற்கு புறம்பானது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாய இட மாறுதல் மற்றும் பணி ஓய்வு காரணங்களால் அலுவலகத்தை விட்டு நீங்கிய அலுவலர்கள்தாம் விடுபட்ட பதிவுகளுக்குப் பொறுப்பு என்பதை வலியுறுத்திக் கற்பித்தல் பணிக்கு ஊறு விளைவிக்கும் வகையில் ஆசிரியர்களை வீணாக அலைய விடும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். தற்போது பணியில் உள்ள அலுவலர்களே இத்தகைய குறைகளைக் களைந்து நல்ல தீர்வு காண வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் வழங்கப்படுதல் முக்கியமானது.


கற்றல் இழப்புகளாலும் ஊரடங்கு கால கவனச் சிதறல்களாலும் இயல்பான மறதியினாலும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவில் மிகவும் பின்னோக்கிச் சென்று விட்ட மாணவர்களை ஓரிரவில் தம் மாயவித்தைகளால் யாராலும் ஒரேயடியாக முன்னோக்கித் தள்ளிவிட இயலாது என்பது கசப்பான உண்மையாகும். இந்த நெருக்கடி நிலையை மாநில அளவிலான பள்ளியை ஆய்வு செய்யும் குழுவினர் உணருதல் நல்லது. 

இயல்பாகவே பதின்ம வயதில் எழும் உளவியல் சார்ந்த மனவெழுச்சிகளுக்கு எப்போதும் வடிகால்களாக இருப்பவை கலையும் இலக்கியமும் ஆகும். படைப்பாற்றல் திறன்கள் இத்தகையோரிடம் எப்போதும் மேலோங்கிக் காணப்படும். பள்ளி நூலக வாசிப்பும் பேச்சு, எழுத்து, ஓவியம், நடிப்பு சார்ந்த தனித்திறன் வெளிப்பாடும் மானுடத்தை அறிய வைக்கும். கைத்தொழில் வகுப்பில் வாழ்க்கையின் மீதான தன்னம்பிக்கை மிளிரும். இவற்றுக்கெல்லாம் ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு மாணவருக்கும் தக்க களம் அமைத்துத் தரவேண்டியது இன்றியமையாதது. இதுபோன்ற நற்செயல்களில் மாணவரை ஈடுபடுத்தும் போது நற்பண்புகள் வளர்வதுடன்  நெறிபிறழ்ந்து தவறான பழக்கவழக்கங்களில் தம்மை வேறு வழியின்றி ஆட்படுத்திக் கொள்வது பெருமளவு குறையும். 

இதனைக் கருத்தில் கொண்டு தமிழகக் கல்வித்துறை அண்மையில் 1 முதல் 12 வகுப்புகளுக்கான பாட கால அட்டவணையில் பிற்பகல் கடைசிப் பாடவேளைகளில் தனித்திறன் வெளிப்பாட்டிற்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் விதமாக வாரந்தோறும் ஆசிரியர்கள் மாணவர்களிடம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கூறியதைப் போல இவற்றைக் கட்டாயம் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். பள்ளிகள்தோறும் கலை, இலக்கியம் சார்ந்த போட்டிகளும் விழாக்களும் கடமைக்காக அல்லாமல் ஆசிரியர் மாணவர் நல்லுறவைப் பேணி வளர்க்கும் வகையில் அமைந்திடுதல் சாலச்சிறந்தது. திசைமாறிப் போகும் இளைய பாரதத்தினரை நல்வழியில் மட்டுமல்லாமல் நேர்வழியிலும் பயணிக்க வைக்க பள்ளிகளை விட்டால் சமுதாயத்தில் வேறில்லை. கல்வித்துறையில் காணப்படும் இவைபோன்ற எண்ணற்ற களைகள் களையப்படுவதும் புதிய மாற்றங்களைச் திறந்த மனத்துடன் செயற்படுத்துவதும் அவற்றை ஏற்றுக் கொள்வதும் அனைவரின் கடமையாகும்.

- எழுத்தாளர் மணி.கணேசன்.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts