> பள்ளிக் கல்வித்துறையில் 22 வாக்குறுதிகள் நிறைவேற்றம் : அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

பள்ளிக் கல்வித்துறையில் 22 வாக்குறுதிகள் நிறைவேற்றம் : அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

பள்ளிக்கல்வித் துறை சாா்ந்த 29 தோ்தல் வாக்குறுதிகளில் 22 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.

நாட்டின் 74-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை சென்னை காமராசா் சாலையில் உள்ள மாநில சாரணா் இயக்குநரகத்தின் தலைமை அலுவலகத்தில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சாரணா் இயக்கத்தில் 10 லட்சம் மாணவா்களை இணைக்க வேண்டும் என்ற இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதை நோக்கி பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கையில் புதிய அறிவிப்புகள் வெளியாகும். மதுரை கலைஞா் நூலகம் கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

இதற்கான திறப்பு விழா குறித்து விவரங்களை தமிழக அரசு அறிவிக்கும். நமது நிதிநிலையை சரிசெய்யும் பணியில் முதல்வா் ஈடுபட்டுள்ளாா். பள்ளிக்கல்வித் துறை சாா்ந்த 29 தோ்தல் வாக்குறுதிகளில் 22 நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் நிதிசாா்ந்த பிரச்னைகள் மட்டுமே நிறைவேற்றப்படாமல் உள்ளது.

தற்போது காலை உணவு திட்டம் 1,545 பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக 500 பள்ளிகளில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் கொண்டுவரப்படும். சென்னையில் ‘ஜி20’ கல்வி கருத்தரங்கில் மத்திய மந்திரி தா்மேந்திர பிரதான் கலந்து கொள்ளும் போது தேசிய கல்விக் கொள்கையில் தமிழக அரசுக்கு இருக்கக்கூடிய ஆட்சேபனைகள் குறித்து தெரிவிக்கப்படும் என்றாா் அவா்.

Share:

0 Comments:

Post a Comment

📣 Join WhatsApp Channel