தமிழக அரசு பள்ளிகளில் இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு தொடக்கம்!!!

தமிழக அரசு பள்ளிகளில் இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு தொடக்கம்!!!

2022-23-ம் ஆண்டில் 6-18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிவதற்கான கணக்கெடுப்பு பணி டிச.19-ம் தேதி தொடங்கி அடுத்தாண்டு ஜன.11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.


இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, தமிழ்நாடு மாநி்ல திட்ட இயக்குனர் இரா.சுதன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: ஒவ்வொரு ஆண்டும் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனுடைய குழந்தைகளை கண்டறிய சிறப்புக் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது.

இந்த கணக்கெடுப்பிற்கான தரவுகள் அனைத்தையும் உள்ளீடு செய்து கணக்கெடுப்பு மேற்கொள்ளும் வகையில் ஒரு கைப்பேசி செயலிமுதன்முறையாக வடிவமைக்கப்பட்டு அதன் மூலம் சென்ற கல்வியாண்டிற்கான கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டது. இதன் வழியாக கிடைக்கப்பெற்ற அனுபவங்களிலிருந்து கைப்பேசி செயலியில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு 2022-23-ம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு பணி நடத்தப்படவுள்ளது.

இப்பணியை அனைத்து மாவட்டங்களிலுள்ள ஆசிரியப் பயிற்றுநர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கல்வி தன்னார்வலர்கள், சிறப்புப் பயிற்றுநர்கள், இயன்முறைப் பயிற்சியாளர்கள் (Physiotherapist), சிறப்பு பயிற்சி மையப் பாதுகாவலர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், தொடர்புடைய பிற துறை அலுவலர்கள் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.


தொடர்ந்து 30 வேலை நாட்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி ஒரு குழந்தை பள்ளிக்கு வராமல் இருந்தால் அக்குழந்தையை இடைநின்ற குழந்தையாகக் கருத வேண்டும். இத்துடன் பள்ளிக்கு அடிக்கடி வராமல் இருந்து இடைநிற்கும் வாய்ப்பு அதிகம் உள்ள குழந்தைகளும் இதில் அடங்குவர். பள்ளியே செல்லாத குழந்தைகள், 8-ம் வகுப்பு முடிக்காமல் இடைநிற்கும் குழந்தைகள் ஆகியோர் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் ஆவர். இவர்களைக் கண்டறிந்து பள்ளிகளில், சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்க வேண்டும்.

கணக்கெடுப்பு:

கணக்கெடுப்பை தொடங்குவதற்கு முன்பு மாவட்டத்திலுள்ள அனைத்து குடியிருப்பு விவரங்களை ஊரக வளர்ச்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய துறையினரிடமிருந்து பெற்று இறுதி செய்ய வேண்டும். அனைத்து ஒன்றியங்களிலும் எந்தவொரு குடியிருப்பும் விடுபடாமல் வீடு வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இடம் பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் எண்ணிக்கையை மிகச் சரியாக, எந்த ஒரு குழந்தையும் விடுபடாமல் கண்டறிதல் வேண்டும்.

கட்டுமான பணிகள், செங்கல் சூளை, அரிசி ஆலை, கல்-குவாரி, மணல்- குவாரி, தொழிற்சாலைகள் மற்றும் விவசாயம் போன்றவற்றில் பணிபுரிய பல்வேறு மாநிலங்களிலிருந்து, மாவட்டங்களிலிருந்து தொழில் நிமித்தமாக தமிழகத்திற்கு வருகின்றனர்.

அதனால், தொழிற்சாலை, மார்க்கெட் பகுதிகளில், கணக்கெடுப்பு நடத்தும்போது குழந்தை தொழிலாளர் நலத்துறை, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், சைல்டு ஹெல்ப் லைன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு துறை அலுவலர் மற்றும் காவல் துறையுடன் இணைந்து ஆய்வு நடத்த வேண்டும். ரயில் நிலையத்தில் கணக்கெடுப்பு நடத்தும்போது ரயில்வே சைல்டு ஹெல்ப் லைன் உடன் இணைந்து நடத்த வேண்டும்.


பெருநகரங்களில் கணக்கெடுப்பு பணியினை மேற்கொள்ளும் போது மாநகர ஆணையரின் ஆலோசனையுடன் குழந்தைகள் நலனுக்காக சிறப்பாகச் செயல்படும் தொண்டு நிறுவனங்கள், உதவி குழுக்களைக் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தி எந்தவொரு குடியிருப்பு பகுதியும் விடுபடாமல் கணக்கெடுப்புப் பணியினை மேற்கொள்ள வேண்டும்.


வீட்டு வாரியாக கணக்கெடுப்பு:

வீடு வாரியான கணக்கெடுப்பில் குறிப்பாக ரயில் நிலையம், பேருந்து நிலையம், உணவகங்கள், பழம், பூ மற்றும் காய்கறி அங்காடி மற்றும் குடிசை பகுதிகள், கடலோர மாவட்டங்களிலுள்ள கரையோர பகுதிகளில் வாழும் மீனவ குடியிருப்பு பகுதிகள், விழாக்கள் நடைபெறும் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

கணக்கெடுப்பு குறித்தும், அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சலுகைகள் குறித்தும் ஊடகங்கள், உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள், பண்பலை, ரேடியோ, திரையரங்குகள், கிராம நிர்வாக அலுவலகங்கள், ஊராட்சி அலுவலக அறிவிப்புப் பலகை, நியாய விலைக் கடைகளில் விளம்பரம் செய்ய வேண்டும். கணக்கெடுப்பு களப்பணி டிச.19-ல்தொடங்கி அடுத்தாண்டு ஜன.11 வரை நடைபெற வேண்டும் என்று இரா.சுதன் தெரிவித்துள்ளார்.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts