12th தமிழ் - திருப்புதல் தேர்வு-4

12th தமிழ் - திருப்புதல் தேர்வு-4


வகுப்பு - XII

கால அளவு : 3 மணிநேரம்

First Revision Questions - Answer Key - Click Here

மதிப்பெண்கள்: 90                                                                                                       14X1=14

பகுதி - 1

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க

1.உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் இத்தொடர் உணர்த்தும் பண்பு

அ) நேர்மறை பண்பு                               ஆ) முரண் பண்பு

இ) எதிர்மறைப் பண்பு                            ஈ) இவை அனைத்தும்

விடை :ஆ) முரண் பண்பு   

2.பொருத்துக

அ) ஆமந்திரிகை     -பட்டத்து யானை

ஆ)அரசுவா                 - மூங்கில்

இ) கழஞ்சு                  -இடக்கை வாத்தியம்

ஈ) கழை                    -எடை அளவு

அ) 3142       ஆ)4213      இ) 1234       ஈ) 4321

விடை:அ) 3 1 4 2  

3. திண்ணியர் என்பதன் பொருள் 

அ) அறிவுடையவர்                  ஆ) மன உறுதியுடையவர்

இ) தீக்காய்வார்                      ஈ) அறிவினார்

விடை:ஆ) மன உறுதியுடையவர்

4. இரட்சணிய யாத்திரிகம்_______பருவங்களை உடையது

அ) 3     ஆ) 6      இ)5       ஈ)2

விடை: இ) 5

5.சுவடியோடு பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க.

அ) வசம்பு      ஆ) மணத்தக்காளி இலைச்சாறு   

 இ) கடுக்காய்        ஈ) மாவிலைக்கரி

விடை:இ) கடுக்காய்

6. "குழிமாற்று" எந்தத் துறையோடு தொடர்புடைய சொல்? 

அ) இலக்கியம் 

ஆ) கணிதம் 

இ) புவியியல் 

(ஈ) வேளாண்மை

விடை: ஆ) கணிதம் 

7. பலர் துஞ்சவும் தாம் துஞ்சான் விழித்தவரும் அவரைப் பாடியவரும் 

அ) சோழன் நெடுங்கிள்ளியை, பரணர் 

ஆ)சோழன் நெடுங்கிள்ளியை, கோவூர் கிழார்

இ) கணைக்கால் இரும்பொறையை கபிலர் 

ஈ) கரிகாலனை, உருத்திரங்கண்ணனார்

விடை: ஆ)சோழன் நெடுங்கிள்ளியை, கோவூர் கிழார்

8. இலக்கியத்தில் மேலாண்மை என்னும் நூலின் ஆசிரியர் 

அ)வெ. இறையன்பு 

ஆ) பக்தவத்சலபாரதி

இ) தி சு நடராஜன் 

ஈ) உவே சாமிநாதன்

விடை: அ)வெ. இறையன்பு 

9. பொருத்துக

அ) மாச்சீர்,

ஆ) காய்ச்சீர்

இ) விளச்சீர் 

ஈIஓரசைச்சீர்

அ) 1243       ஆ) 4312       இ) 2314        ஈ) 3421

விடை:  ஆ) 4312

கருவிளம் கூவிளம்


நாள் மலர்


தேமாங்காய் புளிமாங்காய்


தேமா புளிமா

10.வெண்பாவிற்குரிய தளைகள் 

அ)3      ஆ) 4.        இ)2      ஈ) 1

விடை: இ) 2 

குறிப்பு: இயற்சீர் வெண்டளை,வெண்சீர் வெண்டளை

11.பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுள் பொருந்துவதை தேர்க 

அ) தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல் 

ஆ)தேவையற்ற இடங்களில் இடைவெளிவிட்டு எழுதுதல் 

இ) நிறுத்தற்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல் 

ஈ)வல்லின மெய்களைத் தேவையான இடங்களில் இடாமல் எழுதுதல்

விடை: இ) நிறுத்தற்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல் 

12.தோப்பில் முகமது மீரான் எழுதிய 1997 ல் சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினம் 

அ) துறைமுகம்         ஆ) கூனன் தோப்பு 

இ) தலைக்குளம்       ஈ) சாய்வு நாற்காலி

விடை : ஈ) சாய்வு நாற்காலி

13.உண்டு பிறந்து வளர்ந்த இடந்தனில்- இத்தொடரில் பெயரெச்சம் 

அ) உண்டு     ஆ) பிறந்து 

இ)வளர்ந்த     ஈ) இடம் தனில்

விடை : இ) வளர்ந்த

14)தொல்நெறி -இலக்கணக்குறிப்பு தருக

அ) வினைத்தொகை 

ஆ) பண்புத்தொகை

இ) எண்ணும்மை 

ஈ) உரிச்சொல் தொடர்

விடை : ஆ) பண்புத்தொகை

பகுதி - II 

பிரிவு -1

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக 

15.கலி விழா, ஒளிவிழா விளக்கம் தருக

Answer :

 • கலிவிழா – திருமயிலையில் கொண்டாடும் எழுச்சிமிக்க விழா
 • ஒலிவிழா – கபாலீச்சரம் இறைவனுக்குப் பூசையிடும் பங்குனி உத்திர ஆரவார விழா.

16.ஒருமுக எழினி, பொருமுக எழினி குறிப்பு எழுதுக

ஒருமுக எழினி:

 • நாட்டிய மேடையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்குச் செல்லுமாறு அமைக்கப்படும் ஒரு ரூ’ முகத்திரை

பொருமுக எழினி:

 • மேடையின் இருபுறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு அமைக்கப்படும் பொருமுகத்திரை

17. பகைவராலும் அழிக்க முடியாத அரண் எது?

Answer

 • அறிவானது ஒருவனுக்கு அழிவு வராமல் காக்கும் கருவி என்றும், பகைவராலும் அழிக்க முடியாத அரண் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.

18.இறைமகனாரின் இன்னலைக் கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினர்?

Answer

 • இவ்வுலகம் பிளந்து வெடிக்கவில்லையே!
 • வானம் இடிந்து விழவில்லையே!
 • கடல் நீர் வற்றவிவ்லையே!
 • உலகம் அழியவில்லையே எனப் புலம்பினர்.

பிரிவு - 2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக.

19. அக்காலத்துக் கல்வி முறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் யாவை?

Answer:

தமிழில் : 

 • நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதிநூல்கள்.

கணிதத்தில் : 

 • கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள்.

‘தலைகீழ்ப்பாடம்’ என்ற முறையும் உண்டு.

 • ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் போன்ற அகராதி வடிவில் அமைந்த நூல்கள் நினைவாற்றலை வளர்க்க உதவின.

20. பருவத்தே பயிர் செய் - நேரமேலாண்மையோடு பொருத்தி எழுதுக

Answer:

 • சரியான காலத்தில் விதைப்பது தான் பட்டம் என்பதைப் பருவம் என்பர்.
 • ‘பருவத்தே பயிர் செய்’ என்பது அனுபவச் சொல்.
 • ஆழ்ந்து யோசித்தால் பயிருக்கு மட்டுமன்று; பயிர் செய்யும் மனிதகுலத்துக்கும் பொருந்தும்.
 • பருவத்தே செய்ய வேண்டிய செயல்களில் முக்கியமானது பள்ளிக்குச் செல்வது – கற்க வேண்டிய பருவத்தில் கற்று வாழ்க்கையைச் செம்மைப்படுத்தல் வேண்டும்.

21. எழுத்தாணிகள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை?

Answer

எழுத்தாணியின் வகைகள் மூன்று.

மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, குண்டெழுத்தாணி.

பிரிவு -3.

எவையேனும் ஏழனுக்கு விடை தருக

22. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக

அ)ரவைக்கு சித்தப்பன் காவலுக்கு போகச் சொல்

Answer : இரவு காவலுக்கு சிற்றப்பனை காவலுக்கு போகச் சொல்க.

ஆ) நிலத்து கௌறனும்டா அப்பதான் வயிறு நிறையும்.

Answer : நிலத்தைக் கிளற வேண்டுமடா அப்போதுதான் வயிறு நிறையும்

23. அடைப்புக்குள் உள்ள பெயர்ச்சொல்லைத் தொடர்களுக்கு ஏற்றவாறு

மாற்றி எழுதுக

அ) முருகன் _________(வேகம்) சென்றும் பேருந்தை பிடிக்க இயலவில்லை

ஆ) நேற்று முதல்_________ ( அணை) நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

Answer: 

அ) முருகன் வேகமாகச் சென்றும் பேருந்தை பிடிக்க இயலவில்லை

ஆ) நேற்று முதல் அணையின்  நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

24.பொருள் வேறுபாடு அறிந்து தொடர் அமைக்க

அ) கான்    காண்

answer : கான் = காடு    , காண் = பார்

( பொருத்தமான தொடர் எப்படி எழுதினாலும் மதிப்பெண் வழங்கப்படும்)

25. மரபுச் சொற்களை தொடரில் அமைத்து எழுதுக.

அ) கண்துடைப்பு.

Answer

அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவிக்கும் தீவீரவாதிகள், உயிர்க்கொலை செய்வதை நாங்கள் விரும்பவில்லை என்று கூறுவது வெறும்கண்துடைப்பாகும்

26.மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.

அ)வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக் குட்டியும் யானைக் குட்டியும் கண்டேன்

ஆ) பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர்.

answer

அ)வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக் குருளையும் யானைக் குட்டியும் கண்டேன்

ஆ) பனை ஓலையால் கூரை வேய்ந்திருந்தனர்.

27. இலக்கணக் குறிப்பு எழுதுக 

அ) விரிகடல். ஆ)மலரடி

Answer: 

அ) வினைத்தொகை  - விரிகடல்

ஆ) உவமைத்தொகை-மலரடி

28. பகுபத உறுப்பிலக்கணம் தருக

அ)வைத்த

 (அல்லது)

ஆ)அமர்ந்தனன்

விடை:

அ)வைத்த = வை+த்+த்+அ

வை = பகுதி

த் = சந்தி

த் = இறந்தகாலஇடைநிலை

அ = பெயரெச்ச விகுதி

ஆ)அமர்ந்தனன் = அமர்+த்(ந்)+த்+அன்+அன்

அமர் = பகுதி

த் = சந்தி , ந் ஆனது விகாரம்

த் = இறந்தகாலஇடைநிலை

அன் = சாரியை

அன் = விகுதி

29. புணர்ச்சி விதி தருக

அ).நன்மொழி (அல்லது) ஆ)உள்ளொன்று

answer : 

அ).நன்மொழி  = நன்மை+ மொழி

விதி = ஈறுபோதல்

ஆ)உள்ளொன்று = உள்+ ஒன்று

விதி 1 = தனிக்குறில் முன் ஒற்று உயிரின் வரின் இரட்டும்

\விதி 2 = உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே

30. தமிழாக்கம் தருக 

அ) Eraser. - அழிப்பான்

ஆ) Animation - இயங்குபடம்

பகுதி -III பிரிவு - 1.


எவையேனும் இரண்டனுக்கு விடை தருக

31.இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார்?

Answer:

(i) சென்னை கந்தகோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே! குளிர்ந்த முகத்தையுடைய தூய்மையான மாணிக்க மணியே! அருள் நிறைந்த சைவமணியே!

(ii) எனக்கு ஒரு நெறிப்பட்ட மனதுடன் உன் மலர் போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும். உள்ளத்தில் ஒன்றும், புறத்தில் ஒன்றும் பேசும் வஞ்சகர் உறவு என்னைப் பற்றாதவாறு காக்க வேண்டும்.

(iii) சிறந்த வாழ்வியல் நெறிகளைப் பின்பற்ற எனக்கு அருள்புரிய வேண்டும். மதமான பேய் என்னை அணுகாதிருக்க வேண்டும். பெண்ணாசையை என் மனம் துறக்க வேண்டும். என்றும் உன்னை மறவாதிருக்க வேண்டும்.

(iv) நின் கருணையாகிய நிதி, நோயற்ற வாழ்வு உடையவனாக இருக்க வேண்டும் என்று கந்தகோட்டத்துக் கந்தவேளிடம் இராமலிங்கர் வேண்டுகிறார்.

32. நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு குறித்து உங்கள் கருத்தை எழுதுக?

Answer:

சிலம்பு காட்டும் நாட்டிய அரங்கத்திற்கான இடம் :

“எண்ணிய நூலோர் இயல்பினில் வழாஅது

மண்ண கம் ஒருவழி வகுத்தனர்”

கற்றுணர்ந்த சிற்ப நூலாசிரியரால் சொல்லப்பட்ட இயல்பு மாறாத நன்னிலத்தை ஆடல் அரங்கிற்காகத் தேர்ந்தெடுத்தனர்.

மூங்கில் கொணர்தல் :

 • பொதிகைமலை போன்ற மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கில்களில், ஒரு சாண் அளவு கணுக்களைக் கொண்ட மூங்கில்களைக் கொண்டு வந்தனர்.

ஆடல் அரங்கம் அமைத்தல் :

“நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்.”

நூல்களில் கூறப்பட்ட முறையில் மூங்கில் கோல் அளவுகொண்டு அரங்கம் அமைத்தல்.

மூங்கில் அளவுகோல் :

 • கைப்பெருவிரலில் இருப்பத்து நான்கு அளவு கொண்டதாக அம்மூங்கிலை வெட்டினர். அதை அரங்கம் அமைக்கும் கோலாகக் கொண்டனர். அதில் ஏழுகோல் அகலமும் எட்டுகோல் நீளமும், ஒருகோல் உயரமும் உடையதாக நாட்டிய அரங்கம் அமைக்கப்பட்டது.

33. மனத்திட்பம் அவசியமான பண்பு என்பதைக் குறள் நெறி நின்று விளக்குக

Answer:

“வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்

மற்றைய எல்லாம் பிற.”

மனவலிமை :

 • செயலினது வலிமை என்பது அதனைச் செய்பவனின் மனவலிமையே ஆகும். ஏனைய வலிமைகள் எல்லாம் மனவலிமையிலிருந்து வேறுபட்டவை.

”சொல்லுதல் யார்க்கும் எளிய அறியவாம்

சொல்லிய வண்ணம் செயல்”

எளிது – அரிது : 

 • ஒரு செயலை இவ்வாறு செய்யலாம் என்று சொல்வது எளிது. ஆனால், சொல்லியபடிச் செய்து முடிப்பது அரிது.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெரின்”

எண்ணத்தில் வலிமை :

 • ஒரு செயலை எண்ணியவர் எண்ணத்தில் வலிமை உடையவராக இருந்தால், எண்ணியதை எண்ணியபடியே செய்து முடிப்பர்.

“உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து.”

உருவம் பொருட்டல்ல :

 • ஒருவரது உருவத்தைப் பார்த்து இகழ்ந்துரைக்கக் கூடாது. உருண்டு ஓடும் பெரிய தேருக்குச் சிறிய அச்சாணி போல இன்றியமையாதவராக அவர் இருக்கலாம்.

34.யானை புக்க புலம் போல தானும் உண்ணான் உலகமும் கெடுமே - உவமையும் பொருளையும் பொருத்தி விளக்குக

Answer:

உவமை :

சிறிய நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாகக் கொடுத்தால் யானைக்குப் பல நாட்கள் உணவாகும்.

பொருள் :

அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடம் வரிதிரட்டினால் நாடு கோடிக்கணக்கில் செல்வத்தைப் பெற்றுச் செழிப்படையும்.

உவமை :

பெரிய வயலில் யானை புகுந்து உண்ணுமாயின் வாயில் புகுந்த நெல்லைவிடக் காலில் மிதிப்பட்ட நெல்தான் அளவு அதிகமாகும்.

பொருள் :

அறிவில்லா அரசன் முறை தெரியாமல் வரிதிரட்டுவானாயின் நாடு விரைவில் கெட்டொழியும், யானை புகுந்த நிலம் போல ஆகிவிடும். அரசன் தானும் பயன்படமாட்டான் நாட்டு மக்களும் துன்புறுவர்.

பிரிவு - 2.

35.நீங்கள் ஆசிரியர் ஆனால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறி படுத்துவீர்கள்?

Answer:

(i) மாணாக்கர்களின் அறிவு, திறன்கள், மனப்பாங்கு , செயற்பாடுகள், பண்புகள், பாடரீதியான அடைவுகள் எல்லா மாணவர்களுக்கு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற எனது மனநிலையை மாற்றுவேன்.

(ii) கற்றலில் பின்னடைவு அடைந்திருக்கும் மாணாக்கரை எக்காரணம் கொண்டும் கற்றலில் முழு அடைவு அடையும் மாணாக்கரோடு ஒப்பிட்டுக் கூறமாட்டேன் மாறாக, கற்றலில் அம்மாணவன் பின்னடைவு அடைந்ததற்கான காரணத்தைக் கண்டு அவனைத் தேற்றுவேன்

(iii) கற்றலில் பின்தங்கிய மாணாக்கர் கற்றலில் இடர்ப்படுவதற்கான காரணத்தை இனங்கண்டு அவன் முழுமையான அடைவு எய்த நல்ல வழிகாட்டியாகச் செயல்படுவேன்.

(iv) எல்லா மாணாக்கரையும் அன்புடன் அணுகும் மனத்தைப் பெறுவேன். தகாத வார்த்தைகள், பொருத்தமற்ற வார்த்தைகளை ஒருபோதும் வகுப்பறையில் உச்சரிக்க மாட்டேன்.

(v) மாணக்கர்களின் குடும்பச்சூழல்களை உணர்ந்து அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கூறுவேன்.

36. மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க.

Answer

 • முதலில் ஆசிரியர் தரையில் எழுத அதன் மேல் பிள்ளைகள் எழுதினர். மணலில் எழுதிப் பழகுவர்.
 • எழுத்துகள் வரிசையாகவும் நன்றாகவும் அமைந்திருந்தன.
 • பழங்காலத்தில் கல், களிமண்பலகை, உலோகத்தகடு, துணி, இலை, பனைஓலை, பூர்ஜ மரப்பட்டை, மரப்பலகை, தோல், மூங்கில் பத்தை போன்றவையும் எழுதுபடுபொருட்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
 • இலை, மரப்பட்டை, களிமண் பலகை போன்றவை விரைவில் அழியக்கூடியவை.
 • மரப்பலகை, மூங்கில் பத்தை இவைகளின் பெரிய நூல்களை எழுதிக் கையாள்வது கடினமாக இருந்தன. தோல், துணி, உலோகத்தகடு போன்றவை மிகுந்த பொருட்செலவினை உண் டாக்கின.
 • கருங்கல்லில் எழுதினால் பிற இடங்களுக்குக் கொண்டு செல்வது கடினமாகும். ஓலைச்சுவடிகளில் எழுத்தாணிகளைக் கொண்டு எழுதினர். கல்வெட்டுகளில் கல்தச்சர்களால் சிற்றுளி கொண்டு எழுத்துகள் பொறிக்கப்பட்டன. களிமண் பலகைக் கணிதம் எழுத்தாணி கொண்டே எழுதினர்.
 • எழுத்துகளின் உருவம் பல காலமாக மாறாமல் இருந்தது. காலம் செல்லச் செல்ல எழுதுகோலைப் பயன்படுத்திக் காகிதத்தில் எழுதும் முறையைக் கற்றுக்கொண்டனர்.

37.வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைபனவற்றை எழுதுக.

Answer:

 • (i) வேளாண்மைக்குள்ளும் மேலாண்மை கூறுகள் உண்டு. சரியான பயிர், உரிய நேரத்தில் விதைத்தல் நீர் மேலாண்மை, அறுவடைக்குப் பின் பாதுகாத்தல் நல்ல விலைவரும் வரை இருப்பு வைத்தல்.
 • (ii) ஒவ்வொரு கட்டத்திலும் விழிப்போடும், பொறுப்போடும் செயல்பட்டால் வேளாண்மை செழிக்கும்.
 • (iii) மனமே ஒரு வேளாண்மைக்குட்பட்ட மேலாண்மை.

38.நேர மேலாண்மை குறித்து வெ.இறையன்பு கூறும் கருத்துக்களைத்

தொகுத்து எழுதுக.

சரியான காலத்தில் விதைப்பது தான் பட்டம் என்பதைப் பருவம் என்பர்.

‘பருவத்தே பயிர் செய்’ என்பது அனுபவச் சொல்.

ஆழ்ந்து யோசித்தால் பயிருக்கு மட்டுமன்று; பயிர் செய்யும் மனிதகுலத்துக்கும் பொருந்தும்.

பருவத்தே செய்ய வேண்டிய செயல்களில் முக்கியமானது பள்ளிக்குச் செல்வது – கற்க வேண்டிய பருவத்தில் கற்று வாழ்க்கையைச் செம்மைப்படுத்தல் வேண்டும்.

பிரிவு-3.

எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடை தருக

39.சொற்பொருள் பின்வருநிலையணி (அல்லது) தொழில் உவமை அணியை

Answer:

அணி விளக்கம் :

செய்யுளில் முன்னர் வந்தச் சொல் அதேப் பொருளில் பின்னர் பலமுறை வருவது சொற்பொருள் பின்வரு நிலையணியாகும்.

சான்று :

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்பொருள் காண்பது அறிவு

விளக்கம் :

இக்குறட்பாவில் பொருள் என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தருவதால் சொல்பொருள் பின்வரும் நிலையணி ஆகும். எந்த ஒரு பொருள் பற்றி எவர் கூறினாலும் அதனை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், அந்தப் பொருளில் உள்ள உண்மையை ஆராய்ந்து எடுத்துக் கொள்வதே அறிவுடைமை ஆகும்.

தொழில் உவமை அணியை சான்றுடன் விளக்குக.

Answer:

அணி விளக்கம் :

ஒரு பொருளின் தொழில் அல்லது செயல் காரணமாக அமையும் உவமை தொழில் உவமை எனப்படும்.

சான்று :

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார் – குறட்பா.

உவமை : தீயில் குளிர் காய்பவர் போல.

உவமேயம் : அரசனைச் சார்ந்திருப்பவர் விலகாமலும் நெருங்காமலும் நடந்துகொள்ள வேண்டும்.

அணிப்பொருத்தம்:

அரசனைச் சார்ந்து இருப்பவர் குளிர்காய்பவர்களைப் போல தீயிலிருந்து அகலாது அணுகாது இருத்தல் வேண்டும். இதில் அகழுதல், அணுகுதல் போன்ற தொழில் ஒப்புமை எதிர்மறையில் வந்துள்ளதால் தொழில் உவமை எனப்படும்.

40.பாடாண் திணையைச் சான்றுடன் விளக்குக.

Answer:

திணை விளக்கம்:

 • பாடாண் திணை என்பது பாடப்படும் ஆண் மகனின் புகழ், வலிமை, கொடை, அருள், கல்வி, ஒழுக்கம் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவதாகும்.

சான்று விளக்கம்:

வாயிலோயே எனத் தொடங்கும் ஔவையாரின் புறநானூற்றுப் பாடலில், ‘பரிசிலர்க்கு அடையா வாயிலோயே!’ என்ற வரி இடம் பெற்றுள்ளது.

 • அதாவது தன்னை நாடி வரும் பரிசிலர்க்கு வாயிலை அடைக்காத அரண்மனை அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை.
 • தன்னை நாடிவரும் புலவர்கள் முதற்கொண்டு அனைவருக்கும் வாரிவழங்கும் நல்ல உள்ளம் கொண்டவன் அதியமான் நெடுமான் அஞ்சி.
 • பரிசிலர் வரும்போது வாயிலை அடைக்காத குணம் உடையவன் என்றதால் அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மை புலனாகிறது.

பொருத்தம்:

 • தன்னை நாடி வருவோர்க்கு இல்லை என்று சொல்லாது தனது அரண்மனை வாயிலை வாயிற்காவலனைக் கொண்டு அடைக்காமல் பரிசிலர்க்கு உரிய பரிசினைப் பெற எப்போதும் திறந்திடும் வாயிலை உடையது அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை என்று கூறியதிலிருந்து அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மை வெளிப்படுவதால் இப்பாடல் பாடாண்திணைக்கு உரியது என்பதை அறியலாம்.

41.பழமொழியை வாழ்க்கை நிகழ்வுகளோடு பொருத்தி எழுதுக. 

யானைக்கும் அடி சறுக்கும்.

(அல்லது)

முயற்சி திருவினையாக்கும்

42. இலக்கிய நயம் பாராட்டுக (மையக் கருத்துடன் எவையேனும் மூன்று நயங்களை எழுதுக

பூமி சருகாம் பாலையை

முத்து பூத்த கடல்களாக்குவேன் புயலைக் கூறு படுத்தியே- கோடி

புதிய தென்றலாக்குவேன்

இரவில் விண்மீன் காசினை -செலுத்தி

இரவலரோடு பேசுவேன்!

இரவெரிக்கும் பரிதியை ஏழை விறகெரிக்க வீசுவேன்

-நா காமராசன்


43. தமிழாக்கம் தருக

I make sure I have the good habits which include respecting my elders greeting people when I meet them, wishing them well when departing etc... . other than this observing the law serving the poor and downtrodden, helping the sick and needy, giving shelter to the homeless, assisting someone who is physically challenged etc... I develop other good habits like writing, listening to music, dancing, singing etc.. are other such habits which fulfill the needs of my soul.

பகுதி IV.

இரு பக்கங்களுக்கு மிகாமல் விடையளி.

44. அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணை நிற்கும் என்பதை வள்ளுவன் வழிநின்று நிறுவுக

Answer:

அறிவுடைமை வாழ்வின் உயர்விற்கு துணை நிற்கும் :

”அறிவுற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்

உள் அழிக்கல் ஆகா அரண்.”

 • அறிவானது உயிர்க்கு அழிவு வராமல் பாதுகாக்கும் கருவியாகும். மேலும் அறிவானது, பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் அதுவே ஆகும்.

“சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ

நன்றின்பால் உய்ப்பது அறிவு.”

 • மனத்தினை, அது போகும் போக்கில் போகவிடக் கூடாது. தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு”

 • எந்தப் பொருளை யார் வாயிலாகக் கேட்டாலும் அந்தப் பொருளின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதே அறிவு ஆகும்.

“எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

அவ்வது உறைவது அறிவு”

 • உலகம் எத்தகைய உயர்ந்த நெறியில் செல்கிறதோ அந்நெறியில் தாமும் உலகத்தாடு இணைந்து செல்வதே அறிவாகும்.

“எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை

அதிர வருவதோர் நோய்”

 • பின்னால் வரப்போவதை முன்பே அறிந்து காத்துக் கொள்ளும் வல்லமை கொண்ட அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றில்லை.

முடிவுரை:

 • அறிவு பாதுகாப்புத் தரும் கருவி, நல்வழியில் செலுத்தக்கூடியது அறிவு, உண் மையைக் கண்டறிய உதவும் அறிவு, வருமுன் காப்பது அறிவு என்று மனித வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் வாழ்க்கையின் உயர்வுக்குத் துணையாய் நிற்பது அறிவே என்பதை வள்ளுவன் வழியில் கண்டோம்.

(அல்லது)

சென்னையில் உள்ள மயிலாப்பூர் கந்தகோட்டம் பகுதிகள் செய்யுளில் எவ்விதம் காட்சிப்படுத்தப்படுகின்றன?

Answer:

மயிலாப்பூர்:

(i) இளம்பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் திருவிழாக்கள் நிறைந்த வீதிகளையுடைய பெரிய ஊர் திருமயிலை.

(ii) அங்கு எழுச்சிமிக்க விழாக்கள் நிகழும் மயிலை கபாலீச்சரம் என்னும் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனுக்குப் பூசையிடும் பங்குனி உத்திர ஆரவார விழா அன்று முதல் இன்று வரை சிறப்பாக நடைபெறுகிறது. அவ்விழாவினைக் கண்குளிரக் காண வேண்டும்.

கந்தகோட்டம்:

(i) அறம் செய்வோர்கள் நிறைந்திருக்கும் சென்னையின் கந்தக்கோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே! குளிர்ந்த முகத்தோற்றத்தையுடைய தூய மாணிக்க மணியே! மணிகளுள் அருள் நிறைந்த சைவமணியே!

(ii) எனக்கு ஒரு நெறிப்பட்ட மனதுடன் உன்னுடைய மலர் போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்களின் உறவு வேண்டும். உள்ளத்தில் ஒன்றும் புறத்தில் ஒன்றும் பேசும் வஞ்சகரின் உறவு என்னைப் பற்றாதவாறு காக்க வேண்டும்.

(iii) உனது புகழைப் பேச வேண்டும்; பொய் பேசாமல் இருக்க வேண்டும். சிறந்த வாழ்வியல் நெறியைப் பின்பற்ற எனக்கு அருள வேண்டும். மதப்பேய் என்னை அணுகாதிருக்க வேண்டும். பெண்ணாசையை என் மனம் மறக்க வேண்டும்.

(iv) நல்ல அறிவும், கருணையாகிய நிதியும் நோயற்ற வாழ்வும் உடையவனாக நான் இருக்க வேண்டும். ஆறுமுகங்கள் உடைய தெய்வமாகிய மணியே இத்தகைய சிறப்புகளை எனக்கு அருள்வாயாக என்று கந்தகோட்டத்தில் பெருமானிடம் வேண்டுகிறார்.

45. பண்டைக்கால கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கு இடையே நிகழ்ந்த கற்றல் கற்பித்தல் முறைகளை தொகுத்து எழுதுக

Answer:

(i) பண்டைக்காலத்தில் ஆசிரியர்களிடையே மிகுந்த உறவுமுறை இருந்தது. ஆசிரியரை உபாத்தியார் என்றனர். உபாத்தியாரைக் கணக்காயர் என்பர். உபாத்தியாயருடைய வீடே குருகுலமாக இருந்தது.

(ii) ஊர்தோறும் பொதுவாக இடத்தில் மேடை அமைக்கப்பட்டிருக்கும். அம்மேடையை மன்றம் என்றும் அம்பலம் என்றும் கூறுவர். மன்றம் என்பது மரத்தடியில் உள்ள திண்ணை . அதுதான் : பிறகு திண்ணைப் பள்ளிக்கூடமாக மாறியது. மரத்தடிப் பள்ளிகள் நாளடைவில் குடிசைப் பள்ளியாக மாறியது.

(iii) பெற்றோர்கள் ஐந்து வயதில் பிள்ளைகளை ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். ஒரு நல்ல நாளில் ஏட்டின் மீது மஞ்சள் பூசி பையனிடம் கொடுப்பர். உபாத்தியார் நெடுங்கணக்கைச் சொல்ல மாணவன் அதைப் பின்பற்றிச் சொல்வான். இப்படி மாணாக்கர்கள் பலர் சேர்ந்து சொல்வதை ‘முறை வைப்பது’ என்பர்.

(iv) சுவடியில் எழுத்துகள் தெளிவாகத் தெரிய மஞ்சள், மணத்தக்காளிச் சாறு, மாவிலைக் கரி, தர்ப்பைக் கரி தடவுவர். உபாத்தியாயர் மாணவர்களை முதலில் மணலில் எழுதிப் பழக்குவர். உபாத்தியாயர் எழுதியதின்மேல் மாணவர்கள் எழுதி எழுதிப் பயிற்சி பெறுவர்.

(v) எழுத்துகள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், வரிகோணாமல் பழைய காலத்தில் எழுதும் முறையைக் கற்றுக் கொடுத்தனர். புள்ளி, கால், கொம்பு, விலங்கு முதலியவை வரியெழுத்தின் உறுப்புகளாகும். இதனை முறையாகக் கற்றுக் கொடுத்தனர்.

(vi) மனனம் செய்யும் முறையைச் சொல்லிக் கொடுத்தனர். மாணாக்கர்கள் அதிக முயற்சி எடுத்து மனனம் செய்தனர்.

(vii)  தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள் முதலியவற்றையும் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய அகராதி வரிசையில் அமைந்த நூற்களை மனப்பாடம் செய்ய வைப்பதன் மூலமாகக் கற்றுக் கொடுத்தனர்.

(viii) கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள் மூ லம் கற்பித்தல் நடைபெற்றது. எல்லோரும் ஒன்றாகக் கூடி கேள்விகள் கேட்டும் விடைகூறியும் கற்றுவரும் முறையும் இருந்தது. சுவடியில் எழுத்துகளை எழுதும் முறையும், கற்றுக்கொடுத்தனர்.

(ix) ஆசிரியர்கள் மாணக்கர்களை அன்பினால் வழி நடத்தி வந்தார்கள். கற்றல் கற்பித்தல் முக்கியமாக விளங்கியவாதம் செய்யும் கற்றல் முறையும் இருந்தது. அரசவையில் கூடவாது புரியும் அளவிற்குக் :கற்றல் முறைகள் இருந்தன. பள்ளிக்கூடத்தில் மாணாக்கர்கள் நூல் பயிலும் இயல்பை நன்னூல் நூற்பா இவ்வாறு கூறும்.

“வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை
கடனாக் கொளினே மடநனி இகக்கும்”

 – நன்னூல் 41

(x) ஞாபகசக்தியை வளர்க்க தினமும் பூ, மிருகம், பட்சி, ஊர் இவற்றின் பெயர்களில் வகைக்கு ஒவ்வொன்றை ஆசிரியர் சொல்லி அனுப்ப மாணாக்கர் அந்தப் பெயர்களை மறுநாள் மறவாமல் வந்து சொன்னார்கள்.

(xi) இவ்வாறு, மாணவர்களின் எல்லாத் திறமைகளையும் வளர்க்கும் விதமாக கற்பித்தல் இருந்தது. : மாணவர்களும் தங்களின் அறிவினை வளர்க்கும் விதமாகக் கற்றனர்.

(அல்லது)

நிருவாக மேலாண்மை குறித்து வெ.இறையன்பு கூறும் கருத்துக்களைத் தொகுத்து எழுதுக.

Answer:

நாலடியார் கூறும் நிருவாக மேலாண்மை :

 • உயர் பதவிகளில் இருப்பவர்கள் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பதில்லை.
 • யார் திறமைசாலிகள் என்று அறிந்து அவர்களை அருகில் வைத்துக் கொண்டால் போதும்.
 • தெரிந்திருப்பது ஒரு வகை அறிவு என்றால் யாருக்குத் தெரியும் எனத் தெரிந்திருப்பது மற்றோர் அறிவு.

இதையே நாலடியார்,

“கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தாழுகின்

நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின்

ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்ந்தலாற் புத்தோடு

தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு” என்று பக்குவமாகக் கூறுகிறது.

 • நிருவாகத்தில் வரவே செலவைத் தீர்மானிக்க வேண்டும்.
 • வரவைத் தாண்டி நிறையச் செலவு செய்பவன். அடுத்தவரிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்படுவான்

ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் நிதி மேலாண்மை :

 • டைமன் என்பவன் ஏதேன்ஸ் நகரில் இருந்தன். அவன் வரவு குறைந்தாலும் செலவு அதிகம் செய்தான்.
 • அவன் உதவியாளர் நிதி நிலைமையைப் பேசும் பொழுதெல்லாம் கேட்க மறுத்தான்.
 • கடன் ஒரு நேரத்தில் கழுத்தை நெறித்தது. அப்போதும் அவன் வருந்தவில்லை.
 • அவன் தான் அளித்த விருந்தை உண்பவர் உதவி செய்வார்கள் என்று பொய்க்கணக்குப் போட்டான்.
 • சேவகர்கள் நான்கு திசைகளிலும் சென்று வெறும் கையோடும் வெளிரிய முகத்தோடும் திரும்பினார்கள்.
 • டைமன் ஊருக்கு ஒதுக்குப்புறமாகச் செல்கிறான். மனித இனத்தையே வெறுக்கிறான்.

ஔவையாரின் நிருவாக மேலாண்மை :

 • தாம் ஈட்டும் பொருளினைவிட அதிகமாகச் செலவு செய்பவர்கள் பிற்காலத்தில் தங்கள் மானத்தையும், அறிவினையும் உணர்வையும் இழப்பார்கள். அவர்கள் எவ்வழி நடந்தாலும் திருடர்கள் போல நடத்தப்படுவார்கள். எத்துணைப் பிறப்பு பிறந்தாலும் எவ்வித மரியாதையும் கொடுக்கப்படாமல் தீயவர் போலவே நடத்தப்படுவர்.

“ஆன முதலில் அதிகம் செலவானால்

மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை

எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்

நல்லார்க்கும் பொல்லனாம் நாடு”

 • என்ற பாடல் மூலம் ஒளவையார் நிதி நிருவாக மேலாண்மையை விளக்குகிறார்.

46."கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன"இது குறித்து உங்கள் கருத்தை விவரிக்க

(அல்லது)

மகாநடிகரைக் கண்ட பாலசந்திரனின் மனவோட்டத்தை நயத்துடன் எழுதுக

பகுதி -V

அடிபிறழாமல் செய்யுள் வடிவில் எழுதுக

47.{அ} "பாதகர்" எனத்தொடங்கும் இரட்சணிய யாத்திரிகப் பாடல்

(ஆ)"செயல்", என முடியும் குறட்பாவை எழுதுக

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post

POST ADS 2

எங்களது Kalvikavi & TNTET Arts YouTube telegram , Whatsapp இணைந்திடுங்கள் 
y
Please Wail material is Loading...