2023 - 2024ஆம் கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வு அறிவிப்பு எப்போது?: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்..!

2023 - 2024ஆம் கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வு அறிவிப்பு எப்போது?: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்..!

"பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான தேதியை முன்கூட்டியே அறிவித்தால்தான், மாணவர்களும் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளமுடியும். எனவே, தீபாவளி முடிந்த பின்னர் பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பு கட்டாயம் வெளியாகும்" என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

சென்னையில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பல்வேறு இயக்ககங்களின் தலைமை அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "

டெட் ஆசிரியர்கள சங்கத்தினர் இன்று காலை என்னை சந்தித்தனர். ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் வழியாக அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்தப் போவதாக கூறினார்கள். அதை நான் இல்லை என்று சொல்லவில்லை. அதேநேரம், சிலநேரங்களில் நீதிமன்றத்தில் இருந்து காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று உத்தரவு வருகிறது.

2013-ம் ஆண்டைச் சேர்ந்த டெட் ஆசிரியர்களான அவர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளனர். 2014, 2017,2019 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் நடந்த தேர்வுகளில் தேர்வாகி, ஏறத்தாழ 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் அவர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களது தரப்பில் இருந்து ஒருவிதமான அழுத்தம் கொடுக்கப்படுகிறது. எனவே, இவை அனைத்தையுமே அரசு பரிசீலித்து இதற்கான ஒரு வழிமுறைகளை செய்ய முடியுமா? அல்லது இதற்கு வேறு என்ன மாற்று நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலரிடம் எங்களது ஆலோசனைகளை தெரிவித்துள்ளோம். 2012-13 தொடங்கி தற்போது தேர்வாகியுள்ளவர்கள் வரை, அனைவரையும் திருப்தி அடையச் செய்யும்படியான வழிவகைகள் இருக்கும்படி ஒரு நல்ல நவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

வருகைப் பதிவு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "எமிஸ் செயலியைப் பொறுத்தவரை, ஆசிரியர்கள் அவர்களது வருகைப் பதிவு மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவை மட்டும் பதிந்தால் போதும். மற்றவை தேவை இல்லை. தேவை இல்லை என்றால், அதற்கான மாற்றாக கிட்டத்தட்ட 9 ஆயிரம் ரிசோர்ஸை நாங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.பொதுத் தேர்வுக்கான தேதிகள் எப்போது அறிவிக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது முக்கியமாக இருக்கிறது. அதுபோல், ஏப்ரல் மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தேர்வு நடக்கலாம் என்று தெரிகிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வைப் பொறுத்தவரை, செய்முறைத் தேர்வு முடிந்து, சிறு இடைவெளிக்குப் பின்னர் பொதுத் தேர்வை தொடங்க வேண்டியுள்ளது.

ஜனவரி மாதம் நடத்தப்பட வேண்டிய திருப்புதல் தேர்வை நடத்த வேண்டியிருக்கிறது. டிசம்பர் மாதத்துக்குள் அரையாண்டுத் தேர்வுக்கான பாடத்திட்டங்களை முடிக்க வேண்டிய பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, பொதுத் தேர்வுக்கான தேதியை முன்கூட்டியே அறிவித்தால்தான், மாணவர்களும் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளமுடியும். எனவே தீபாவளி முடிந்த பின்னர் பொதுத் தேர்வு அட்டவணை குறித்து அறிவிப்பு கட்டாயம் வெளியாகும்" என்று அவர் கூறினார்.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts