12th Tamil First Mid Term Important Questions with Answer

12th Tamil First Mid Term Important Questions with Answer

1.கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார் ?

Answer:

செந்நிறத்து வானம் போல் சிவந்த கைகள் உடைய உழைக்கும் தொழிலாளர்களின் திரண்ட தோள் மீது வீற்றிருக்கும் வியர்வை முத்துக்களைப் பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார் சிற்பி.

2.நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக.

Answer:

நடைபெற்றியலும் (கிளவியாக்கம், 26) என்றும் நடை நவின்றொழுகும் (செய் 135) என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறது.

கவிதையின் இயங்காற்றல்தான் நடை என்கிறது தொல்காப்பியம்.

3.மொழியின் சிறப்பு வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக மாற்றுபவை எவை?

Answer:

உவமம், உருவகம், எச்சம், குறிப்பு , உள்ளுறை, இறைச்சி

4.அணியிலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல்கள் யாவை?

Answer:

தண்டியலங்காரம், மாறனலங்காரம், குவலயானந்தம்.

5.அணியிலக்கணத்தோடு பிற இலக்கணத்தையும் கூறும் நூல்கள் யாவை?

Answer:

தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்து வீரியம் ஆகும்.

6.நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது’ – விளக்கம் தருக.

Answer:

மழை மேகத்தால் நகரம் இருள் சூழ்ந்தது. பெய்யென மழை பெய்தது.

திடீரென சூரியன் தோன்ற மழைமேகத்தால் மறைந்திருந்த நகரம் பிரகாசமாய்க் காட்சியளிக்கிறது.

சில மழைத்துளிகளின்மீது படுகின்ற சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பால் நகரமே வெள்ளை வைரமாகக் காட்சியளிக்கிறது.

7.வாகைத்திணை’ விளக்குக.

Answer:

வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகைப்பூவைச் சூடுவதாகும்.

தாங்கள் பெற்ற வெற்றியைக் கொண்டது வாகைத்திணை.

8.புக்கில், தன்மனை – சிறு குறிப்பு எழுதுக.

Answer:

புக்கில் :

‘புக்கில்’ என்பது தற்காலிகமாகத் தங்கும் இடத்தைக் குறிப்பதாகும்.

தன்மனை :

திருமணத்திற்குப் பின் கணவனும், மனைவியும் பெற்றோர்களிடமிருந்து பிரிந்து தனியாக வாழும் இடம் ‘தன்மனை’.

9.நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து யாது?

Answer:

நிலையாமை என்பது உலக வாழ்வு நிலை இல்லாதது என்பதைக் குறிக்கும்.

“என் பொய்யான உலகப்பற்று அழிந்தது; என் பிறவி ஒழிந்தது” என்று சவரி நிலையாமை குறித்துக் கூறுகிறாள்.

12th Tamil First Mid Term Important 4 Mark questions 

1.சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் – விளக்குக.

Answer:

எந்தத் தொன்மையான மொழியும் சமிக்ஞையிலிருந்தும், இசையிலிருந்தும் தான் தோன்றுகிறது.

சங்கப்பாடல்களில் ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்கின்றன.

இதனையே அந்தப் பனுவல் பாடல்களின் ஒலிப்பின்னல் என்கிறோம். இந்த ஒலிக்கோலங்கள் உணர்ச்சிகளைக் காட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன.

கடந்தடு தானை மூவிருங் கூடி

உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே;

முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நன்னாடு;

முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;

உயிர் ஒலிகள் குறிப்பாக நெடில் ஒலிகளின் வருகையும், சில ஒலிகளும் சில சொற்களும் திரும்பவரல் தன்மை பெற்றிருப்பதும், இவற்றோடு சேர்ந்து நிகழ்த்தப்பெறும் சொல் விளையாட்டுகளும் சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாக விளங்கியதை உணர்த்தும்.

2.‘ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

Answer:

இடம் :

இப்பாடலின் அடி தண்டியலங்காரம் என்னும் அணி இலக்கண நூலின் பொருளணியியலில் இடம் பெற்றுள்ள உரை மேற்கோள் பாடலாகும். இதன் ஆசிரியர் தண்டி ஆவார்.

பொருள் :

மக்களால் போற்றப்பட்டு, உயர்ந்த மலைகளுக்கு இடையே பொதிகையில் பிறந்து, சான்றோரால் தொழப்பட்டு, மக்களின் அறியாமை என்னும் இருளைப்போக்கும் தமிழே உனக்கு நிகர் இல்லை என்கிறார்.

கடலால் சூழப்பட்ட இந்நிலவுலகின் இருளைப் போக்கும் கதிரவனைப் போல அகஇருளைப் போக்கும் தமிழ்மொழிக்கு நிகர் எம்மொழியும் இல்லை என்பதாகும்.

3.பேரிடர் மேலாண்மை ஆணையம் – விளக்கம் தருக.

Answer:

(i) பேரிடர் மேலாண்மை ஆணையம் நடுவணரசால் 23.12.2005இல் தொடங்கப்பட்டது.

(ii) புயல், வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், தீ விபத்து. பனிப்புயல், வேறு விபத்துகள் முதலான பேரிடர்கள் நிகழும் போது இந்த அமைப்புகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்த இந்த ஆணையம் உதவுகிறது.

(iii) இக்குழுக்கள் மாநிலம், மாவட்டம், ஊராட்சி, சிற்றூராட்சி அனைத்து நிலைகளிலும் பேரிடர்க் காலங்களில் இவ்வாணையம் செயல்பட வழிவகை செய்துள்ளது.

(iv) அரசு தீயணைப்புத்துறை, காவல், தன்னார்வத் தொண்டு நிறுவனம் போன்ற பாதுகாப்பு அமைப்புகள் தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.

4.பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக்குடும்பம் – விளக்கம் எழுதுக.

Answer:

தந்தையும் உடன் வாழ்ந்தனர்

(i) சங்க காலத்தில் முதல் நிலை உறவை மட்டும் காணமுடிகிறது.

(ii) நற்றாய் ஒருபுறம் செவிலியும், மகளின் தோழியும் குடும்பத்தில் முதன்மைப் பெற்றனர். இம்முறை பண்டை இனக்குழு மரபின் மாறுபட்ட தொடர்ச்சி பண்டைய காலத்தில் காண முடிகிறது.

(iii) இல்லற வாழ்வின் இறுதிக் காலத்தில் மக்களோடு நிறைந்து. அறம் செய்து, சுற்றத்தாரோடு சேர்ந்து வாழ்தலே தலைவன் தலைவின் இல்லறப் பயன் ஆகும்.

(iv) சங்கச் சமூகம் குடும்பம் என்ற அமைப்பை அடிப்படை அலகாகக் கொண்டு அதன் தொடர்ச்சியாக இன்றைய சமூகமும் கூட்டுக் குடும்பம், தனிக்குடும்பம் கொண்டதாக, தந்தைவழிக் குடும்ப

அமைப்பைக் கொண்டதாகவும் அமைகிறது.

5.“வருபவர் எவராயினும்

நன்றி செலுத்து” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

Answer:

இடம் :

இக்கவிதை வரிகள் ஜலாலுத்தீன் ரூமி அவர்கள் எழுதிய கவிதையின் மொழியாக்கத்தைத் தமிழில் ‘தாகங்கொண்ட மீளொன்று’ என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பாக வெளியிட்டுள்ளார் என். சத்தியமூர்த்தி. அத்தொகுப்பில் உள்ள ‘விருந்தினர் இல்லம்’ என்னும் கவிதையில் இடம்பெற்றுள்ளது.

பொருள் :

வாழ்கின்ற இந்த வாழ்க்கையில் நம்மைத் தேடி வரும் நன்மையோ, தீமையோ எது வந்தாலும் அதற்காக நன்றி சொல்ல வேண்டும்.

விளக்கம் :

வாழ்க்கை என்பது எல்லாம் கலந்த கலவை. நம் வாழ்க்கை விருந்தினர் இல்லம் போன்றது. நமது வீட்டிற்கு வரும் விருந்தினர்களில் மகிழ்ச்சியுடனும் வருபவர்களும் இருப்பர். துக்கங்களைக் கொண்டு வருபவர்களும் இருப்பர். அதுபோன்றுதான் நம் வாழ்க்கையும். ஆனந்தம், மனச்சோர்வு, : – அற்பத்தனம், சிறிது விழிப்புணர்வு என பல வாழ்வியல் வடிவங்கள் நம்மைத் தினம் தினம் விருந்தினர்களைப் போலச் சந்திக்கலாம் அவற்றை எல்லாம் நாம் வரவேற்க வேண்டும்.

6.சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமையை எழுதுக.

Answer:

இராமன் ஆற்றிய கடமைகள் :

இராவணன் சீதையைச் சிறையெடுத்த போது தடுத்துச் சண்டையிட்டுக் காயப்பட்டவன் சடாயு.

அவன் இராவணனோடு சண்டையிட்டுத் தன் உயிரை இழந்ததை அறிந்த இராமன் தன் தந்தையாகவே சடாயுவைக் கருதினான்.

ஒரு தந்தைக்கு மகன் எவ்வாறு இறுதிச் சடங்குகளைச் செய்வானோ அதைப் போன்று இராமன் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டான்.

பார்ப்பவர்கள் வியக்கும்படியான கரிய அகில் கட்டைகளையும் சந்தனக் கட்டைகளையம் இராமன் கொண்டு வந்தான்.

தேவையான தருப்பைப் புற்களை ஒழுங்குபட அடுக்கினான். பூக்களையும் தூவினான். மணலினால் திருத்தமான மேடை அமைத்து, நன்னீரும் கொண்டு வந்தான்.

இறுதிச்சடங்கு செய்யப்படக்கூடிய மேடைக்குத் தன் தந்தையாகக் கருதிய சடாயுவைத் தன் பெரிய கைகளினால் தூக்கிக் கொண்டு வந்தான்.

12th Tamil Important 6 Mark questions

1.கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி விளக்குக.

Answer:

கவிதையின் நடையைக் கட்டமைப்பன:

பாட்டு அல்லது நடை அழகியியல் கூறுகளில் ஒலிக்கோலங்களும் சொற்களின் புலமும் தொடரியல் போக்குகளும் முக்கியமானவை.

கவிதை – நடையியல்:

மொழியின் தனிச்சிறப்பான கூறுகளும், அவற்றைக் கையாளுகின்ற வகைமைகளும் கவிதையின் உந்து சக்தியாக அமைகின்றன. மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமைமிக்க ஆற்றல் கவிதைக்காக, இலக்கியத்துக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. கவிதையின் இயங்காற்றல்தான் நடை. நடைபெற்றியலும் (கிளவியாக்கம் – 26) என்று தொல்காப்பியம் கூறுகிறது.

ஒலிக்கோலங்கள்:

தொன்மையான மொழிகள் யாவும் சமிக்ஞையிலிருந்தும், இசையிலிருந்தும்தான் தொடங்குகிறது. ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்கின்றன. இதையே, அந்தப் பனுவலின் – பாடலின் ஒலிப்பின்னல் என்கிறோம்.

சான்று: “கடந்தடு தானை மூவிருங்கூடி உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே”

இப்பாடலில் க, த, ட, ற முதலிய வல்லின மெய்கள் பிற மெல்லின் இடையின மெய்களைக் காட்டிலும் அதிகமாக வருகிறது. இதன் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்த்து ஒலிக்கோலத்தின் வலிமையை அறியலாம்.

படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசை

கடாஅ யானைக் கலிமான் பேக (புறம் – 145)

இதில் பல உயிர் ஒலிகள் வருகையும் திரும்பவரல் தன்மையும் இவற்றோடு சேர்ந்து நிகழ்த்தப்பெறும் சொல் விளையாட்டுகளும் இங்கே கவனத்திற்குரியன. ஒலிக்கோலம் சங்கப்பாடல்களின் ஒரு முக்கியப்பண்பு.

சொற்புலம் :

சொல்வளம் என்பது ஒருபொருள் குறித்த பல சொல், பல பொருள் குறித்த ஒரு சொல், பலதுறை, பலசூழல், பல புனைவுகளுக்கும் உரியதாய் வருதலும், உணர்வும், தெளிவும் கொண்டதாய் : 2 வருதலும், எனப் பலவாறு செழிப்பான தளத்தில் சொற்கள் விளைச்சல் கண்டிருப்பதைக் குறிக்கும். சான்றாக, முல்லைக்கலியில் காளைகளில் பல இனங்களைக் காட்டுகின்ற சொற்கள் உள்ளன. சொல்வளம் ஒரு பண்பாட்டின் அடையாளம். சொல்வளம் என்பது தனிச்சொற்களாய் நிறைந்து அமைவதையும் குறிக்கும்.

தொகைநிலை :

சங்க இலக்கிய மொழியின் அடையாளமாக உள்ள ஒரு பண்பு இது. இதனைத் தொகைநிலை என்று தொல்காப்பிய எச்சவியல் பேசுகிறது. தொகைமொழி என்பது செறிவாக்கப்பட்ட ஒரு : வடிவமைப்பு.

அது வாக்கிய அமைப்பில் ஒரு சொல் போலவே நடைபெறும்.

சான்று: வைகுறுவிடியல், கவினுறு வனப்பு, தீநீர் என்பன.

தொடரியல் போக்குகள் :

ஒலிக்கோலமும், சொற்புலமும் சொற்றொடர் நிலையும் பாடலின் தளத்தை ஏர் நடத்திப் பண்படுத்திப் போகின்றன என்றால், பாத்தி கட்டி வரப்புயர்த்தும் பணிகளைத் தொடரியல் வடிவம் செய்கின்றது. பரிமாறப்படும் உணர்வுகளுக்கும் செய்திகளுக்கும் ஏற்பத் தொடர்கள் ஏறியும் இறங்கியும் திரும்பியும் சுழன்றும் இயங்குகின்றன.


கவிதை மறுதலைத்தொடர் :

தொடரமைப்பு என்பது எழுவாய் + செயப்படுபொருள், அல்லது பிறவற்றுடன் கூடிய அமைப்பு + பயனிலை என்று வருவது மரபு. இது சங்கப்பாடல்களில் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.

சான்று: பேரெயின் முறுவலாரின், நம்பி நெடுஞ்செழியனுடைய சாவுச்சடங்கு பாடல்

“இடுகவொன்றோ, சுடுகவொன்றோ

படுவழிப்படுக இப்புகழ் வெய்யோன் தலையே” (புறம் – 23

9)

இதன் இறுதி அடி பிறழ்வோடு அமைந்துள்ளது. ஏனைய 20 அடிகளில் தொடர் வரிசையாகவும் நேர்படவும் செல்கின்றன. ஒவ்வோர் அடியும் வினைமுற்றுகளோடும், தன்னிறைவோடும் முடிகின்றன. இப்படி 18 பண்புகளை வரிசைப்படுத்திய பிறகு, தொகுத்துச் சொல்வதுபோல, : – (ஆங்குச் செய்பவையெல்லாம் செய்தனன் ஆதலின்) கூறிவிட்டுப் போடா போ – புதைத்தால் புதை; சுட்டால் சுடு என்று அலுத்துக் கொள்கிறது.

2.குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு? விளக்குக.

Answer:

குடும்பம் என்ற அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே.

குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து உள்ளது. நாணயத்தின் இருபக்கங்கள் போலகுடும்பமும்திருமணமும் உள்ளது. திருமணம், குடும்பம் தொல்காப்பியத்திலோ சங்க இலக்கியத்திலோ இடம் பெறவில்லை குடும்பம் என்ற சொல் திருக்குறளில் பயின்று வருகிறது.

கட்டமைப்பு:

(i) ‘குடும்பு’ எனும் சொல் கூடிவாழ்தல் என்று பொருள்படுகிறது. பண்டைத்தமிழர்கள் குடும்பம் 1 என்ற அமைப்புடன் வாழ்ந்த இடங்கள் பல. அவற்றுள் சில: புக்கில், தன்மனை.

(ii) புக்கில் என்பது தற்காலிகத் தங்குமிடம் ஆகும். தன்மனை என்பது திருமணம் ஆன கணவன், மனைவி பெற்றோரை விட்டு வாழும் இடம் ஆகும்.

(iii) மணந்தகம் என்பது மணம் புரிந்த கணவன் மனைவியும் சேர்ந்து வாழத் தொடங்கி முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலக்கட்டத்தைக் குறிப்பது ஆகும். . சங்க காலத்தில் பெரும்பான்மையான சமூகத்தில் தாயே தலைமை ஏற்றிருப்பாள். பெண் திருமணம் செய்த பின்னும் தன் வீட்டிலே வாழ்க்கை நடத்தும் முறை இருந்தது. பெண் குழந்தைகள் பேறு முதன்மைப்படுத்தப்பட்டது

தந்தை வழிக் குடும்பம்:

சங்க காலத்தில் தாய் வழிக் குடும்பம் போலவே தந்தை வழிக் குடும்பமும் வேரூன்றியது.

பெண் திருமணம் ஆன பிறகு கணவனின் தந்தை வீட்டில் வாழ வேண்டும் என்பதை ‘மனையுறை மகளிர்க்கு ஆடவர்’ என்கிறது குறுந்தொகை.

தனிக்குடும்பம்:

தனிக்குடும்பம் என்பது படிமலர்ச்சியில் இறுதியில் ஏற்பட்டது. இது இன்று தொழிற் சமூகத்தில் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது. தனிக்குடும்பம்,

ஆதிக்குடிகளிடமும் இருந்தது என்று இனவரைவியல் ஆய்வுச் சுட்டுகிறது.

விரிந்த சமூகம்:

சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவு பெற்று இவர்களோடு பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் விரிந்த குடும்பமாகக் காணமுடிகிறது.

கணவன், மனைவி, குழந்தைகள் சேர்ந்து பெற்றோர்கள் சேர்ந்து வாழும் நேர்வழி விரிந்த குடும்ப முறை காணமுடிகிறது.

இன்றைய மனித சமூக கட்டமைப்பில் தாய்வழிக் குடும்பம், தந்தைவழிக் குடும்பம் என்ற நிலையைக் கடந்து தனிக்குடும்பம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

சங்கச் சமூகம் குடும்பம் என்ற அமைப்பிலிருந்தே மனித சமூகம் கட்டமைக்கப்படுகிறது. அவற்றின் தொடர்ச்சியாகவே இன்றைய கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம் என்ற அலகைக் கொண்டதாக அமைகிறது. அதுவும் தந்தைவழிக் குடும்ப அமைப்பைக் கொண்டதாக இருக்கிறது. தொன்மைமிக்க இக்குடும்ப அமைப்பு முறை தமிழ்ச் சமூகத்தின் அடையாளமும் பெருமிதமும் ஆகும்.

குடும்பமே சமூகத்தைக் கட்டமைக்கும் களம் :

(i) குடும்பம் தனி மனிதருக்காகவும் சமுதாயத்திற்காகவும் பெரும் பங்காற்றுகிறது. மனித சமூகத்தின் அடிப்படைகளான அன்பு செலுத்துதல், பொருளாதாரப் பகிர்வு, பொழுதுபோக்கு, பாதுகாப்பு, சமயச்செயல்கள், கல்விபெறுதல் ஆகியவை குடும்பத்திலே கற்பிக்கப்படுகின்றன.

(ii) பண்பாட்டைக் குழந்தைப் பருவத்தில் குடும்பம் கற்றுக் கொடுக்கிறது. சமுதாயத்தின் நெறிமுறைகள் அன்றாட வாழ்வில் பின்பற்றப்பட வேண்டிய பழக்கவழக்கங்கள் பொருளாதாரச் செயல்களாகச் செய்யும் முறைகள், சமுதாய சமய வாழ்வில் ஆற்ற வேண்டிய கடமைகள் போன்ற எண்ணற்ற வகைகளில் குடும்பம் குழந்தைகளுக்குப் பயிற்சியளிப்பதால் மனித சமூகம் சிறப்பாகக் கட்டமைக்கப்படும்.

(iii) பண்பாட்டு வயமாக்கல் நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் ஒரு மாதிரி குழுவாகச் செயல்படுகின்றனர்.

(iv) குடும்பம் என்பது தனது உறுப்பினர்கள் என்ற நிலையில் குடும்ப உறுப்பினர்களுக்குப் பயிற்சிகளை வழங்கி அமைதியும் ஒழுங்கும் கொண்ட ஒரு சிறந்த சமுதாயம் அமைய அடிப்படையாக விளங்குவதால், குடும்பம் என்னும் சிறிய அமைப்பில் இருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்புக் கட்டமைக்கப்படுகிறது.


Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post