உழவுத் தொழில் பெருமை கட்டுரை

உழவுத் தொழிலின் பெருமை கட்டுரை

குறிப்பு சட்டகம்

முன்னுரை

உழவு இல்லையேல் உணவு இல்லை

விவசாயத்தின் முக்கியத்துவம்

விவசாயம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

விவசாயத்தை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

முடிவுரை

முன்னுரை

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்” என்கிறார் திருவள்ளுவர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கைப்பிடி உணவை உண்ணுவதற்கு அதில் ஒவ்வொரு விவசாயிகளினுடைய உழைப்பு தங்கியிருக்கும். ஆதலால் தான் உலகத்தில் பல தொழில்கள் இருந்தாலும் உழவுத் தொழில் தலைசிறந்த தொழிலாக காணப்படுகிறது.

இது வரைக்கும் விளம்பரத்தில் ஈடுபடாத ஒரே தொழில் விவசாயம் தான் ஏனென்றால் விவசாயம் தொழில் அல்ல எமது உயிர்நாடி. உலகத்தின் ஒவ்வொரு உயிர்களுக்கும் பசி என்ற உணர்வு இருக்கும் வரை விவசாயம் அழியாது.

இக்கட்டுரையில் விவசாயத்தின் முக்கியத்துவம், விவசாயத்தில் இன்று காணப்படும் பிரச்சனைகள், விவசாயத்தை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்றன நோக்கப்படுகின்றன.

உழவு இல்லையேல் உணவு இல்லை

இங்கே யாரும் உழவில்லை யாரும் விதைக்கவில்லை யாரும் வியர்வை சிந்தி நெல்மணிகளை விதைவிக்கவில்லை என்றால் நாம் உணவிற்கு எங்கே போவது? சற்று சிந்தியுங்கள்.

“விவசாயி சேற்றில் கால்வைத்தால் தான் நாம் இங்கே சோற்றில் கை வைக்க முடியும்”

விவசாயம் ஒன்றும் அத்தனை இலகுவான தொழில் கிடையாது. கஷ்ரப்பட்டு நிலத்தை உழுது பண்படுத்தி வியர்வை சிந்தி பயிரிட்டு அதனை நீர் பாய்ச்சி பாதுகாத்து பசளையிட்டு நோய்களில் இருந்து காப்பாற்றி வெய்யிலில் காய்ந்து மழையில் நனைந்து விலங்குகள் பறவைகளில் இருந்து பயிரை காக்க காவல் இருந்து அறுவடை செய்யும் வரை விவசாயி பாடுபட்டு உழைத்தால் தான் விளைச்சலை பெற முடிகிறது.

இந்த கஷ்ரங்களை பொருட்படுத்தாது மீண்டும் மீண்டும் அவர்கள் உழைத்து கொண்டிருப்பதால் தான் இவ்வுலகமே இயங்கி கொண்டிருக்கிறது என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.


இதனையே திருவள்ளுவர் “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழன்றும் உழவே தலை” என்கிறார்.

விவசாயத்தின் முக்கியத்துவம்

விவசாயம் என்பது ஒரு நாட்டினுடைய முதுகெலும்பு என்று கூறுவார்கள். ஒரு நாடு பொருளாதாரத்தில் தன்னிறைவு காணவேண்டுமாயின் அங்குள்ள மக்களுக்கு போதிய உணவு கிடைக்க வேண்டும்.

அப்போது தான் அந்த தேசம் உத்வேகத்துடன் இயங்க முடியும். பஞ்சம், பசி, பட்டினி என்பன இல்லாத தேசம் ஒன்று உருவாக வேண்டும் என்றால் அந்நாடு விவசாயத்தில் உச்சநிலை பெற வேண்டும். இல்லாவிடில் அந்த நாடு வளர்ச்சி பெறுவதென்பது இயலாத காரியமாகும்.

உலகத்தின் வளர்ச்சி அடைகின்ற, அடைந்த எல்லா தேசங்களும் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் தான் அவை தன்னிறைவடைந்து காணப்படுகின்றன.

விவசாயத்தில் காணப்படும் பிரச்சனைகள்

முன்பு குறிப்பிட்டதனை போல தலைசிறந்த நாடுகள் தமது நாட்டின் விவசாயிகளை ஊக்குவிக்கின்றது. அவர்களது உற்பத்திகளை தாமே கொள்வனவு செய்கிறது. விவசாய உற்பத்திகளை முடிவு பொருட்களாக தனது தொழில்நுட்பங்கள் மூலமாக உற்பத்தி செய்து தனது உள்நாட்டு நுகர்வுக்கு பயன்படுத்தி எஞ்சியவற்றை சர்வதேசத்துக்கும் ஏற்றுமதி செய்கின்றது.

ஆனால் நம்முடைய வளர்முக நாடுகள் அவ்வாறில்லை முதலாளிகளின் கையிலே விவசாயம் உள்ளது. அதிகளவான நிலமும் வசதி படைத்தவர்களிடமே உள்ளது. சாதாரண ஏழை விவசாயிகள் கடன் பட்டு தான் விவசாயம் செய்ய வேண்டிய நிலையானது இருக்கின்றது.

இயற்கை காரணிகளால் பயிர் சேதமடைந்தால் அவற்றுக்கான நஷ்ட ஈடுகளும் கிடைப்பது இல்லை

உற்பத்தி செய்யும் விவசாய பொருட்களுக்கு தனியார் தரகர்களே விலை நிர்ணயம் செய்கிறார்கள். குறைவான விலைக்கு கொள்வனவு செய்து மக்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து முதலாளிகள் அதிக இலாபம் ஈட்ட விவசாயிகளும் சாதாரண மக்களும் மோசமாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் விவசாயிகள் பல வருடங்களாக விவசாயம் செய்ய முடியாது கடன் சுமையால் தற்கொலை செய்வது மனதை உடைக்கும் துயர நிகழ்வுகளாகும். இவ்வாறு பல பிரச்சனைகள் இன்றைய விவசாயத்தில் காணப்படுகின்றன.

விவசாயத்தை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

விவசாயம் செய்பவர்கள் இன்று குறைந்த வண்ணமே இருக்கிறது. மீண்டும் மீண்டும் எத்துயர் வரினும் தம் உடலை வருத்தி எமக்காக போராடும் விவசாயிகளை பாதுகாக்க அரசாங்கம் முழுமனதாக திட்டங்களை வகுக்கவேண்டும்.


விவசாயத்தில் ஊழல் செய்வோரை சிறையில் அடைக்கவேண்டும். விவசாய உற்பத்திகளை அரசாங்கமே கொள்வனவு செய்ய வேண்டும். விவசாய உற்பத்திகளிற்கு மிகச் சரியான கொள்வனவு விலை, விற்பனை விலைகளை நிர்ணயிக்க வேண்டும்.

விவசாயத்திற்கு வேண்டிய உள்ளீட்டு வசதிகள் தொழில்நுட்பங்கள் என்பவற்றை மேம்படுத்தல். விவசாயிகளுக்குரிய காப்புறுதி ஆதரவுகளையும் உரிய மரியாதையையும் கிடைக்க செய்தல்.

இவை போன்ற நடவடிக்கைகளால் விவசாயத்தை பாதுகாக்க முடியும்.

முடிவுரை

உணவு உற்பத்தி எனும் விடயம் உலகத்தில் எத்தனை தொழில்நுட்பங்கள் உருவானாலும் அதற்குரிய மதிப்பு என்றும் குறையாது.

சனத்தொகை பெருக்கம் பெருக்கல் விருத்தியில் பெருகி வருவதால் உணவு உற்பத்தி அதற்கேற்ப இல்லாவிடின் உலகமே பாரிய பிரச்சனைகளில் சிக்கி விடும்.

விவசாயிகள் அனுபவிக்கும் துன்பங்களை கண்டுகொள்ளாது அவர்களுக்காய் குரல் கொடுக்காமல் விட்டால் இங்குள்ள அனைவரும் உணவின்றி இறக்க நேரிடும். அனைவரும் உயிர் வாழ வேண்டுமென்றால் உழவுத்தொழிலை காக்க அனைவரும் முன்வரவேண்டும்.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post