மழை நீர் சேகரிப்பு - கட்டுரை - தமிழ்

மழை நீர் சேகரிப்பு அவசியம் - கட்டுரை - தமிழ்

malai neer semippu katturai tamil

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை,
  • மழை நீரின் இன்றியமையாமை,
  • மழை நீர் சேகரிப்பின் அவசியம்,
  • மழை நீர் சேகரிப்பு முறைகள்,
  • மழை நீரைப் பாதுகாத்தல்,
  • முடிவுரை.


முன்னுரை

  • “நீரின்றி அமையாது உலகு” என்ற வள்ளுவரின் வாக்கிற்கமைய இந்த உலகின் அனைத்து ஜீவராசிகளினதும் ஆதாரமாய் விளங்குவது நீர்.
  • தாவரங்கள் தமது உணவை உற்பத்தி செய்யவும், விலங்குகளும், பறவைகளும் தாகம் தணிப்பதற்கும் நீர் இன்றியமையாததாய் விளங்குகின்றது.
  • இத்தகைய சிறப்பு வாய்ந்த நீரானது உலகிற்கு பல வழிகளில் கிடைக்கப் பெறுகின்றுது. அவற்றுள் மழை மூலம் கிடைக்கப் பெறுகின்ற நீரே மனிதர்களின் பெரும்பாலான தேவைகளைப் பூர்த்தி செய்கின்றது.
  • மழைநீரை சேமித்து அதனைப் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்.
  • இக்கட்டுரையில் மழை நீர் சேமிப்பின் அவசியம் மற்றும் மழை நீர் சேமிக்கும் முறைகள் பற்றி பார்க்கலாம்.

மழைநீரின் இன்றியமையாமை:

  • நீரின் முக்கியத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. நிலம் மற்றும் நீர்நிலைகளிலுள்ள நீரானது ஆவியாகி பின் மழையாகி மீண்டும் இப்பூமியை வந்தடைகின்றது.
  • இந்த மழை நீரில் இயற்கைத்தாதுக்கள் பல நிறைந்து காணப்படுவதனால் குடிப்பதற்கும், சமைப்பதற்கும் உகந்தது.
  • ஆனால் அதனை நேரடியாக எமது தேவைக்குப் பயன்படுத்தாமல் நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டியே பயன்படுத்த வேண்டும். மனிதர்களிற்கு உணவைத் தருவது விவசாயம். ஆதிகாலம் தொட்டு விவசாயத்திற்கு மழைநீரே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
  • ஒருவருடத்தில் மழை கிடைக்கப்பெறும் காலத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு அல்லது மூன்று போகங்களாக பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.
  • அது தவிர பயிர்நிலங்களை அண்டி அணைக்கட்டுக்கள் அமைத்து அந்நீரை மழை கிடைக்காத காலங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.
  • மழைநீர் கிடைக்கப் பெறாதுவிடின் வேளாண்மை நிலங்களெல்லாம் வரண்டு உணவுப்பஞ்சம் தோன்றிவிடும். இந்த உலகை உயிர்ப்பாக வைத்திருப்பதில் பெரும்பங்கு வகிப்பவை காடுகளே.
  • அந்த காடுகளின் நிலைத்திருத்தலிற்கு காரணமாய் அமைவது மழைநீர். இவ்வாறு மழைநீரின் இன்றியமையாமையானது நீண்டு கொண்டே செல்கின்றது.

மழைநீர் சேகரிப்பின் அவசியம்:

  • இப்பூமிப்பரப்பில் காணப்படும் நீரானது மாசடைதலிற்கு உட்படுவதாலும், ஆழ்துளைக்கிணறுகளை அமைத்து நிலத்தடிநீரை உறிஞ்சுவதனாலும் அழிவடைகின்றது.
  • இந்நிலை மாறவேண்டுமாயின் மழைநீரை சேமிப்பது அவசியமாகும். மழைநீரானது வெறுமனே வீணாக கடலுக்கு செல்வதனைத் தடுத்து நிறுத்தி அதனை எமது அன்றாட தேவைகளிற்கு பயன்படுத்தும் போது நிலத்தடி நீரின் பாவனை குறைவடைகின்றது.
  • அத்துடன் பாரிய அளவில் மழைநீரை சேமிக்கும் போது அவற்றை பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்ளல், கட்டடம் கட்டுதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
  • மழைநீர் சேகரித்தலானது, நீர்வளத்தைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு அதனை வழங்குவதற்கான சிறந்த வழியாகும்.

மழை நீர் சேகரிப்பு முறைகள்:

  • வானிலிருந்து பொழியும் மழையை சேகரித்து நீண்டகாலத்திற்கு பயன்படுத்துவதற்கு பல முறைகள் காணப்படுகின்றன.
  • பண்டைய காலத்தில் எமது முன்னோர்கள் மழைநீரை சேகரிப்பதற்காக பாரியளவிலான அணைக்கட்டுக்களையும், குளங்களையும் அமைத்தார்கள்.
  • அத்துடன் மலைச்சரிவுகளில் விழும் நீரை வயலிற்கு அனுப்பவதற்காக படிக்கட்டு முறையிலான கால்வாய்களையும், உருளை வடிவில் நிலத்தடிநீரை சேமிக்கும் அமைப்புக்களையும் அமைத்தார்கள்
  • தற்காலத்தில் நீரை சேகரிப்பதற்கு பல்வேறு நவீனமுறைகள் பின்பற்றபட்டு வருகின்றன.
  • நகரப்பிரதேசங்களில் மொட்டை மாடிகளில் மழைநீர் தொட்டிகள் அமைத்தும், கட்டடக்கூரைகளில் இருந்து விழும் மழைநீரை நிலத்தடியில் தொட்டிகள் அமைத்தும் சேகரிக்கும்முறைகள் காணப்படுகின்றன.
  • கிராமப்புறங்களில் கிணறுகள் மூலமும், தூர்வாரப்பட்ட குளங்கள் மூலமும் மழைநீர் சேகரிக்கப்படுகின்றது. அத்துடன் சில நாடுகள் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆழ்துளைக்கிணறுகளை அமைத்தும் மழைநீரை பாரிய அளவில் சேமிக்கின்றன.

மழை நீரைப் பாதுகாத்தல்:

  • ஒவ்வொரு வருடமும் பெய்கின்ற மழையில் கிட்டத்தட்ட நாற்பது வீதமான மழைநீரானது வீணாக கடலை சென்றடைகின்றது.
  • இந்த நீரை சேமித்து வைத்தாலே உலகிலுள்ள தண்ணீர்ப்பஞ்சம் ஒழிந்துவிடும். மழையினால் கிடைக்கும் மிகுதி நீரானது நிலத்தினால் உறிஞ்சப்படுகின்றது.
  • ஆனால் தற்போது திறந்தவெளிகள் அனைத்தும் சீமேந்து தளங்கள் அமைத்து மூடப்படுவதனால் நிலத்தினால் மழைநீரை உறிஞ்ச முடிவதில்லை.
  • அதனால் நிலத்தடி நீரின் அளவு குறைந்து வருகின்றது. அதற்கு மாற்றுவழியாக கட்டத்தைச் சுற்றி உறிஞ்சுகுழிகளை அமைப்பது அவசியமாகும்.
  • மழையை இவ்வுலகிற்கு வாரிவழங்குவதில் உயர்பங்கு வகிப்பவை காடுகள். காடுகளை அழிப்பதானது மழைக் கிடைப்பனவை அரிதாக்குகின்றது. எனவே காடுகளை பாதுகாப்பதும், மரங்களை மீள உருவாக்குவதும் அவசியமாகும்.

முடிவுரை

  • அனைத்து நாடுகளும் மழை நீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில்ஆர்வம் காட்டிவருவதையும், மழைநீர் சேகரிப்பில் ஈடுபடுவோரை ஊக்குவிப்பதனையும் காணலாம்.மழைநீர் சேகரிப்பு என்பது ஒரு விரயமல்ல. மாறாக எதிர்கால நீர்வளத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு அரிய முதலீடு ஆகும்.கடுமையான நீர்பற்றாக்குறையை இவ்வுலகம் எதிர்நோக்கி வரும் இக்காலகட்டத்தில் இலவச கொடையாகக் கிடைக்கும் மழைநீரை சேமித்து அருகிவரும் நீர்ப்பற்றாக்குறையை தடுப்போமாக.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post