அரசு அலுவலகங்களில் பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் தங்களிடம் எவ்வளவு ரொக்கம் வைத்திருக்கலாம் என்ற விதியை வகுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கலா என்பவர் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், முக்கூடல் சார் பதிவாளராகப் கடந்த 2021-ம் ஆண்டு பணியாற்றியபோது, அலுவலகத்தில் நான் ரூ.45,000 வைத்திருந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டது. இந்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், அந்த பணம் சொந்த செலவுக்காக வைக்கப்பட்டிருந்தது என தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பில், பதிவுத்துறையின் தலைமைப் பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி பணியில் இருக்கும்போது தங்களிடம்
வைத்திருக்கக் கூடிய பண வரம்பு குறித்தும், இது தொடர்பான பதிவேடுகளைப் பராமரிப்பது குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதையடுத்து நீதிபதி, சுற்றறிக்கையை தாக்கல் செய்திருந்தாலும், அது பதிவுத்துறையால் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து அரசு ஊழியர்களையும் உள்ளடக்கிய பொதுவான வழிகாட்டுதல்களோ அல்லது அரசாணையோ இல்லை என்றே தெரிகிறது.
அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது தங்களிடம் வைத்திருக்கக்கூடிய ரொக்கப்பணத்துக்குப் பொதுவான வரம்பை நிர்ணயித்து ஒரே மாதிரியான வழிகாட்டுதல்கள் அல்லது அரசாணையை வெளியிட வேண்டும். இதுகுறித்து அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

0 Comments:
إرسال تعليق